Un Samayal Araiyil Movie Review in Tamil

PUBLISHED DATE : 06/Jun/2014

Un Samayal Araiyil Movie Review in Tamil

உன் சமையல் அறையில் விமர்சனம்

கோவை ஆவி


 

சுவைத்து சாப்பிடக் கிடைத்த ஒரு வரம் தான் இந்த வாழ்க்கை என்ற ஒன் லைனரோடு தொடங்கும் படம், வாழ்க்கையை ருசிக்க ஒரு துணையும் வேண்டும் என்பதோடு முடிகிறது. மொழி, அபியும் நானும், தோனி வரிசையில்  உணர்வுப் பூர்வமான படங்களை  தயாரித்து வழங்குவதற்காகவே ப்ரகாஷ்ராஜுக்கு ஒரு "ஒ" போடலாம்.

 

கதை


"இந்தப் பொறப்புதான் ருசித்து சாப்பிடக் கிடைத்தது" ன்னு கைலாஷ்கர் தமிழையும் சேர்த்து சுவைத்து சாப்பிடுவதோடு ஆரம்பம் ஆகிறது படம். பெண் பார்க்க செல்லுமிடத்தில் பெண்ணை மறந்து வடையை ருசித்து அதை செய்த சமையல்காரனை வீட்டுக்கு கூட்டி வரும் அளவுக்கு ரசனையுடன் சாப்பிடும் காளிதாசுக்கு, சிறுவயதில் தன் தாய் செய்து கொடுத்த 'குட்டி தோசை' ( அதென்ன குட்டி தோசைன்னு தெரியல, தெரிஞ்சவங்க இதுக்கு ரெசிபி அனுப்புங்கப்பா) நினைவில் நிழலாட அதை சாப்பிட விரும்பி ஒரு ராங் நம்பருக்கு போன் செய்கிறாள் கௌரி. தவறான இணைப்பு நட்பாய் பின் காதலாய் மலர அதை சொல்ல, நேரில் சந்திக்க தயங்கியபடியே இருவரும் தன் வீட்டில் இருக்கும் இளசுகளை அனுப்ப அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக இன்டர்வெல். இதற்கு மேல் கதை சொன்னால் அதன் 'சுவை' குறைந்து விடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.

 

ஆக்க்ஷன்


பிரகாஷ்ராஜ்- மனிதர் என்னவாய் ரியாக்க்ஷன்கள் கொடுக்கிறார். ஆதிவாசி தலைவனை மீட்க போலிஸ் ஆபிசருடன் மோதும் போது கோபக் கனல் வீசும் போதும், நட்பு காதலாய் மாறும் தருணத்தில் வெட்கப் புன்னகை சிந்தும் போதும், கிளைமாக்ஸ் காட்சியில் வேண்டுமென்றே ஸ்பீட் பிரேக்கரில் வண்டியை விட்டுவிட்டு நமட்டு சிரிப்பு சிரிக்கும் போதும், கலக்கல் பாஸ். படத்தில் ஒரு கேரக்டர் "உனக்கு நான் தான் வில்லன்" எனக் கூற "எனக்கேவா" என பிரகாஷ் கூறும் போது தியேட்டரில் சிரிப்பலை. சினேகாவின் கம்-பேக் மூவி. ஆனால் அவருடைய பெஸ்ட் மூவி இதுதான் எனலாம். மலையாள ஒரிஜினலில்  ஸ்வேதா மேனன் செய்த காரெக்டரை பல மடங்கு பெட்டராக செய்திருக்கிறார். 

 

தம்பி ராமையா வழக்கம் போல் காமெடி ப்ளஸ் நெகிழ்வு தரும் காட்சிகள் இரண்டிலும் புல் மார்க்ஸ் வாங்குகிறார். சமையலில் குறை சொல்லி வீட்டை விட்டு அனுப்பும் காட்சியில் தம்பி ராமையா, 'அண்ணன்' ராமையாவாகிறார்.  இளங்கோ, ஊர்வசி, ஐஸ்வர்யா புதுமுகங்கள் தேஜஸ், சம்யுக்தா ஆகியோர் ஆங்காங்கே தலை காட்டியுள்ளனர். தேஜஸ் மற்றும் சம்யுக்தா நடிக்க வாய்ப்பிருந்தும் சுமார் பெர்பார்மென்ஸ் தான். அதிலும் "தெரிந்தோ தெரியாமலோ" பாடலில் இந்த ஜோடி ரோமென்ஸ் பண்ண  வரும்போது தெரிந்தோ தெரியாமலோ பலர் கேண்டின் பக்கமாக சென்றதும் நடந்தது.

 

இசை-இயக்கம்-ஒளிப்பதிவு


 

படம் நெடுக வியாபித்திருப்பது மேஸ்ட்ரோ தான். காட்சியின் பின்னணி இசையும் பாடல்களும் பின்னிப் பிணைந்து வருவதால் ரசிகர்கள் காட்சியோடு ஒன்றிப் போக முடிகிறது. கிளைமாக்ஸ் கார் காட்சியில் வரும் துள்ளல் இசை நம் மனசுக்குள்ளும் ஒரு குஷியை உண்டு பண்ணுகிறது. ஆஷிக் அபுவின் கதைக்கு விஜி மற்றும் ஞானவேலின் வசனங்களை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து இயக்கியும் இருக்கிறார் பிரகாஷ். வெல்டன்! ப்ரீதாவின் ஒளிப்பதிவு எச்சில் ஊற வைக்கும் டைட்டில் சாங் மற்றும் ஒவ்வொரு பிரேமிலும் அவர் உழைப்பு தெரிகிறது. 

 

ஆவியை டச் செய்த காட்சி/பாடல்


 

காற்று வெளியில் மற்றும் இந்தப் பொறப்பு தான் பாடல்கள் ரசிக்கும் படி இருக்கிறது. படத்தின் ஓட்டத்தோடு கூடிய எல்லா காட்சிகளுமே ரசித்து பார்க்கும்படி இருந்தன. குடும்பத்தோடு முறுக்கு சாப்பிட்டபடியே ரசிக்கலாம்!

User Comments