Kochadaiiyaan Songs Review in Tamil

PUBLISHED DATE : 11/Mar/2014

Kochadaiiyaan Songs Review in Tamil

கோச்சடையான்  இசை விமர்சனம் 
கோவை ஆவீ 

"சூப்பர் ஸ்டார்"  மற்றும் இசைப்புயலின் கூட்டணியில் மற்றுமொரு வெற்றிப் படைப்பு. கவிஞர் வைரமுத்து மற்றும் வாலிபக் கவிஞர் வாலியின் ஒரு பாடலுடன் நல்ல தமிழ் வரிகளுடன் இசைக்கிறது இந்த இசைத்தட்டு.
                 
1. "மாற்றம் ஒன்று தான் மாறாதது" - "சூப்பர் ஸ்டாரின்" குரலில் "எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகளுண்டு, முதல் வழி - மன்னிப்பு" என்றபடி துவங்கும் இந்தப் பாடலை ஹரிச்சரண் பாட, இடையிடையே ரஜினியின் உணர்சசி  பொங்கும் வசன உச்சரிப்புகளுடன் சிறப்பாக வந்திருக்கும் பாடல்.
2. "மணமகனின் சத்தியம்" - தன் வாழ்க்கைத் துணைக்கு மணமகன் செய்து தரும் சத்தியங்கள் ஒவ்வொன்றும் பெண்கள் ஓர் ஆதர்ச கணவனிடம் எதிர்பார்க்கும் குணங்கள்.. ஹரிசரண் காதலுடன் பாடுகையில் கண்கள் மூடி கேட்கத் தோன்றுகிறது.
 
3. "மணமகளின் சத்தியம்" - லதா ரஜினிகாந்த் எனும் பாடகியை நாம் அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை. இந்தப் பாடலில் அவர் புகுந்த வீடு செல்லும் பெண் கணவனுக்கு செய்து கொடுக்கும் சத்தியங்களை பாங்குடன் பட்டியலிடும் போது எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகளாய் அமைந்திருப்பது ஆச்சரியம்.. ஆயினும் பெண்ணாய் பாவித்து வைரமுத்து எழுதியிருக்கும் இந்த பாடலை ஒரு பெண் கவிஞரே எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது..
 
4. "மெதுவாகத்தான்" - எஸ்.பி.பி  மற்றும் சாதனா சர்கம் பாடியிருக்கும் இந்த டூயட் பாடலை எழுதியிருப்பது மறைந்த கவிஞர் "வாலி". ஓரிரு முறை கேட்டபின் நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. கோச்சடையானின் மகன் ராணாவின் காதல் மெட்டாய் ஒலிக்கிறது இந்தப் பாடல்.
 
5. சில மாதங்களுக்கு முன்பே வெளிவந்து ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட பாடல் "எங்கோ போகுதோ வானம்". SPB யின் கம்பீர குரலில் படை நடத்தி செல்லும் வீரனின் உற்சாக வார்த்தைகள் நமக்கும் உற்சாக டானிக் தான்.. குறிப்பாக ரஹ்மானின் இசை (ஆர்கெஸ்ட்ரா) பெரிதும் பேசப்படும். 
 
6. "எங்கள் கோச்சடையான்" - செண்டை, மேள தாளத்துடன் கோச்சடையானின் புகழ் பாடும் பாடல். அறிமுகப் பாடலாய் ஒலிக்கலாம். 
 
7. "மெல்லிசை குரலோன்" ஸ்ரீனிவாஸ் மற்றும் சின்மயி பாடியிருக்கும் "இதயம்" பாடல் சுமார் ரகம் தான்.. சிலமுறை கேட்டலுக்கு பின் கொஞ்சம் பிடிக்கலாம். சின்மயி பாடும் இறுதி வரிகள் நிச்சயம் தெவிட்டாத தெள்ளமுதை ஊட்டுகிறது.  
 
8. "கர்ம வீரன்" -  துவண்டு போன வீரனை தூண்டி எழுப்பப் பாடும் பாடல் என்பதாலா, இல்லை அது ரகுமானின் குரலா எதுவென்று தெரியவில்லை கிட்டத்தட்ட மரியானின் நெஞ்சே எழு பாடலையே நினைவு படுத்துகிறது. 
 
சில வருடங்களுக்கு முன்பு வந்த "ஜோதா அக்பர்" படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான் பெரிதும் பேசப்பட்டது. இந்த பாடல்கள் சரித்திர படங்களுக்கான ஒரு தாக்கத்தை நம் மனதில் ஏற்படுத்தி செல்கிறது. போனஸாக சூப்பர்ஸ்டாரை ஒரு பாடலில் பேச வைத்திருக்கிறார்கள். 
 
ரஜினி ரசிகர்கள் கொண்டாடிக் கூத்தாட நிறைவான பாடல்கள்.

User Comments