திருமணம் எனும் நிக்காஹ் (Music Review)
கோவை ஆவி
ராஜாராணி வெற்றிக்கு பின் தலா ஒவ்வொரு தோல்வியை சந்தித்த ஜெய் மற்றும் நஸ்ரியா இணைந்து நடிக்கும் படம் திருமணம் எனும் நிக்காஹ்.. ராஜாராணி படத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருந்தாலும் அடுத்த வருடம் தான் வெளிவருகிறது. இந்தப் படத்தின் இசை எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா?
1. "என்தாரா..என்தாரா" - ஷதாப் பரிதி, சின்மயி பாடியிருக்கும் இந்தப் பாடல் மின்சாரம் பாய்ச்சும் காதல் பாடல். கார்த்திக் நேதா எழுதியிருக்கும் வரிகளும், ஜிப்ரானின் இசையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது. "TAAL" படத்தில் அக்க்ஷய் கண்ணா, ஐஸ்வர்யா ராய்க்கு இடையில் காதல் அரும்பும் முதல் பாடலின் சாயலில் இருக்கிறது.
2. சாருலதா மணி, சாதனா சர்கம், விஜயபிரகாஷ், Dr. கணேஷ் இணைந்து பாடியிருக்கும் கிளாசிக்கல் கலக்கல் "கண்ணுக்குள் பொத்தி வைப்பவன்". பாடலுக்கு இடையே காதலனும் காதலியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் "சரச" வரிகளும் உண்டு. கவிஞர் பார்வதியின் எழுத்தாணியில் உருவான பாடலிது.
3. "க்வாஜா ஜி" கடவுளிடம் வேண்டிப் பாடும் பாடலாய் வருகிறது. அரிதுல்லா ஷா, காலிப்-ஈ-ரிபாயி குழுவினர் பாடியிருக்கும் பாடல்.
4. தேன்மொழி தாஸ் எழுதியிருக்கும் "ரயிலே ரா" பாடல் இந்த ஆல்பத்தில் அதிவேகத்தில் செல்லும் ஒரு பாடல். போனி சக்ரபர்த்தி, "இசைமழை"ஹரிஷ், அஸ்விதா மற்றும் நிவாஸ் பாடியிருக்கும் இந்தப் பாடல் இரயில் சிநேகம் போலிருக்கும் காதலை பற்றி பேசுகிறது.
5. யாசின் நசிர் சோக கீதம் பாடியிருக்கும் "யாரோ இவள்" பாடல் அவ்வளவாக நம்மை ஈர்க்காவிட்டாலும்
"மேலே போடும் நீலத் திரை தாண்டி என்னை பார்ப்பாயா,
சட்டென வாழ்ந்திடும் சட்டத்தை விட்டுட்டு என் மன ஓசை கேட்பாயா?"
எனும் பார்வதியின் வரிகள் கவனிக்க வைக்கின்றன.
6. காதல் மதியின் காதல் ரசம் பொங்கி வழியும் "சில்லென்ற சில்லென்ற" பாடலை சுந்தர் நாராயண ராவ் தமிழிலும், கௌசிகி சக்ரபர்த்தி ஹிந்தியில் பாட கேட்பதற்கு இனிமையான பாடல். கௌஷிகியின் தமிழ் உச்சரிப்பும் அழகு. முன்னா சவுகத் அலி மற்றும் ஜிப்ரான் உச்சஸ்தாயியில் பாடும் போது நாமும் மெய்மறந்து தான் போகிறோம்.
முஸ்லிம் திருமணத்தின் பின்னணியில் அமைந்த பாடல்கள் மெல்லிசை தாலாட்டு...