Paradesi Vimarsanam (Tamil)

PUBLISHED DATE : 16/Mar/2013

Paradesi Vimarsanam (Tamil)

பரதேசி விமர்சனம்

by கோவை ஆவி


ஆயிரம் கோடி செலவில் எடுக்கப்பட்ட அவதார் எனும் கற்பனைக் காவியத்தை ரசிக்கிறோம்... இருபது, முப்பது கோடிகளில் நிஜத்தினை எதார்த்தமாக எடுக்கப்பட்ட பாலாவின் பரதேசி படத்தை உங்களில் எத்தனை பேர் பார்க்கலாம்னு இருக்கீங்க? குலுங்க வைக்கும் காமெடியோ, குத்துப் பாட்டுகளோ, அதிரடி சண்டைகளோ எதுவுமின்றி வழக்கமான பாலாவின் திரைப்படமாக வந்திருக்கிறது.

 

கதை என்று பார்த்தால் ஓரிரு வரிகளுள் அடங்கிவிடக் கூடிய விஷயம் தான். ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் செல்வங்களை சுரண்டி நம்மையே அடிமையாக்கி அடக்கியாண்டார்கள் என்பது தான் அது. கதைக்களம் வால்பாறை தேயிலை தோட்டத்திற்கு பல்வேறு கிராமங்களிலிருந்தும் மக்களை சொற்ப பணத்திற்கு அவர்கள் காலம் முடியும் வரை அடிமைகளாய் பணி செய்து கிடக்க வேண்டும். அங்கிருந்து தப்பிக்க நினைப்பவர்களை காலின் நரம்பை அறுத்து நடக்க முடியாமல் செய்து விடுவது.

முதல் பத்து நிமிடங்களில் "ஓட்டுபொறுக்கி" என ஊராரால் அழைக்கப்படும் அதர்வா மற்றும் அவருடைய அத்தை மகள் அங்கம்மா (வேதிகா), இவர்களுக்கிடையில் ஏற்படும் சீண்டல்களும், காதல் காட்சிகளும் தான்.. அதற்குப் பிறகு அந்த கிராமத்துக்கு வரும் கிங்காணி (ஆங்கிலேயரின் ஏஜன்ட்) ஊர் மக்களின் வெள்ளந்தியான மனதை பயன்படுத்தி அவர்களை தொலைதூரத்தில் இருக்கும் பச்சைமலை எஸ்டேட்டிற்கு அழைத்து செல்கிறார். போகிற வழியில் இறப்பவர்களை பற்றி கவலைப்படாமல் 48 நாட்கள் பயணித்து தேயிலை தோட்டத்தை அடைகிறார். அங்கு சென்ற பின் தான் மக்களுக்கு தாம் ஒரு அடிமையாகி விட்டதாய் உணர்கின்றனர்.


அவர்கள் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணத்தை தங்குமிடம், மருத்துவ செலவு, மந்திரித்தல் மற்றும் உணவுக்காக பிடுங்கிக் கொள்கிறார். மேலும் அவர்களை சித்ரவதை செய்தும், பெண்களை ஆங்கிலேய முதலாளிகளுக்கு பரிமாறவும் செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கொள்ளை நோய் பரவும் போதும், ஒரு மருத்துவரை அனுப்ப, அவரோ தன் மதத்தை பரப்புவதிலே நாட்டம் காட்டுகிறார்.. வாழ்க்கையே ஒரு வழிப் பாதையான பிறகு அந்த மக்கள் படும் பாட்டை அழகாக செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் பாலா. கிளைமாக்சை இதைவிட சிறப்பாய் யாராலும் கொடுத்துவிட முடியாது.


அதர்வா தேசிய விருது கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பிரமாதப் படுத்தியிருக்கிறார். உடல்மொழி, உச்சரிப்பு, தோற்றம் என கதாப்பாத்திரத்துடன் கச்சிதமாய் பொருந்துகிறார். வேதிகா, தன்ஷிகா, அதர்வாவின் பாட்டி, நண்பர் (உதய்) மற்றும் அவர் மனைவியாய் வருபவர் (ரித்விகா) இப்படி ஒவ்வொருவரும் நெஞ்சில் நிறைகின்றனர். ஜீவி பிரகாஷ் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார். வைரமுத்துவின் ஒவ்வொரு வரிகளும் கூர்மை.


ஒரு புதினத்தை படமாக்கியிருந்தாலும் அதன் வனப்பும் சோகமும் கொஞ்சமும் குறையாமல் கொடுத்த பாலாவுக்கு ஒரு ஜே!!

User Comments