தெகிடி (Music Review)
கோவை ஆவி
தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில் திருக்குமரன் என்டர்டேயின்மென்ட்ஸ் வழங்கும் தெகிடி படத்தின் ஆடியோவை சில நாட்கள் முன்பு சத்யம் தியேட்டரில் வெளியிட்டனர். அசோக் செல்வன், ஜனனி ஐயர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு நிவாஸ் பிரசன்னா என்ற ஒரு இளம் அறிமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.
1. ஆண்ட்ரியாவின் டிஜிட்டல் குரலில் வரும் நீயும் தினம் பாடல் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு தேவையான எல்லா அம்சங்களுடனும் வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் டைட்டில் சாங் எபெக்டில் இருப்பது கூடுதல் சிறப்பு. பாடலாசிரியர் குறிஞ்சிப் பிரபா எழுதியிருக்கும் பாடல் இது.
2. சைந்தவி பிரகாஷ் மற்றும் அபயின் குரல்களில் ஒலிக்கும் விண்மீன் விதையில் பாடல் இன்னிசை பூங்கொத்து. கவிஞர் கபிலனின் வரிகளும் , வயலின் மீட்டல்களும் ஒன்றை ஒன்று விஞ்சி நிற்கின்றன. இந்த வருடத்திய சிறந்த பத்து பாடல்களுள் இதுவும் இருக்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
3. யார் எழுதியதோ எனும் கபிலனின் வரிகளை சத்யப்பிரகாஷ் உயிரோட்டத்தோடு பாடியிருக்கும் பாடல். "உலகை மறந்தேன், பறந்தேன்" என இவர் ஹை-பிட்சில் பாடுகையில் கேட்பவர் உள்ளங்களையும் காதல் உணர்வில் பறக்க வைக்கிறார்.
4. நீதானே.. நீதானே - சங்கர் மகாதேவனின் சாரீரத்தில் கம்பீரமாக ஒலிக்கும் இந்தப் பாடல் தாளம் போட்டு கேட்க வைக்கும். வீணையையும் இசை பாட வைத்திருக்கிறார் ராஜேஷ் வைத்யா. இந்தப் பாடலின் இசை நிச்சயம் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர் எனும் பெயரை நிவாஸுக்கு பெற்றத் தரும். பாடல் வெளியீட்டின் போது இந்தப் பாடலை அவரே சொந்தக் குரலில் பாடி அசத்தினார்.
5. கண்களை ஒரு - மிக மெலிதாய் பயணிக்கும் இசைக்கு ஏற்றாற் போல் அஜீஷின் குரலும் கூடவே பயணிக்கும் ஒரு நிமிடத் தென்றல் இந்தப் பாடல்
ஒரு அறிமுக இசையமைப்பாளர் என்று சொல்ல முடியாதபடி தரமான இசையை வழங்கியிருக்கும் நிவாஸை கோடம்பாக்கம் சிவப்புக் கம்பள வரவேற்போடு நிச்சயம் ஏற்றுக் கொள்ளும். நிவாஸ் போன்ற இளம் இசையமைப்பாளர்கள் வருவது கண்டிப்பாக தமிழ்த் திரையுலகிற்கு ஆரோக்கியமான விஷயம். வாழ்த்துக்கள்!
Critic Rating - 6.5/10