Director Raam's Konar Notes
”இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் காத்திருத்தலே கலை என்னும் பெயர்த்து”
காத்திருத்தலே சினிமா, திரையரங்கில் இடம் கிடைக்காததனால் படத்தை வெளியிட இயலவில்லை, பணம் பத்தும் செய்யும் போன்ற என்னுடைய வெளிப்பாடுகளுக்கான வினை, எதிர்வினை குறித்துச் சொல்லி என்னை விளக்கம் எழுதுமாறு கேட்டுக் கொண்டே இருந்தார்கள், என் நண்பர்களும் உதவி இயக்குநர்களும்.
காத்திருத்தலே சினிமா
ஒரு படம் வெளியிட ஏன் நான்கு ஆண்டுகள் என எதிர்படும் எல்லாரும் என்னை தினமும் கேட்கும் போது அதற்கு பதில் அளிக்க நான் கடமைப்படுகிறேன். அப்புறம் தினமும் ஒரே கேள்வியை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு பொது பதிலை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இருக்கிறது. அப்புறம் அந்த பதில் யாரையும் குறை சொல்லாமலும் இருக்க வேண்டும். அப்புறம் அந்த பதில் படத்தை பல நாட்கள் நான் எடுக்க வில்லை என்று சொல்வதாகவும் இருக்க வேண்டும். அப்புறம் அந்தப் பதில் தங்கமீன்களை வெகுநாட்களாக எதிர்பார்க்கும் ரசிகர்களின் மனதிற்கு உற்சாகத்தையும் அமைதியையும் கொடுக்க கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அந்தப் பதில் என்னுடைய தாமத்திற்கான பதிலாய் இல்லாமல் தாமதித்துக் கொண்டிருக்கும் ஏனையப் படங்களுக்கு ஆன பதிலாகவும் இருக்கவேண்டும். ஏனெனில் தங்கமீன்கள் மட்டும் அல்ல தாமத்திற்கு உட்பட்டது. இன்னமும் படம் பண்ணாமல் எனக்கு முன் வந்தவரும் பின் வந்தவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்பதில் ”தங்கமீன்கள்” படத்தின் விளம்பரத்திற்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் ஊறு செய்யாமலாவது இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் உள்ளடக்கி அந்தப்பதில் நிஜமாய் நான் உணர்ந்த ஒன்றாகவும் இருக்க வேண்டும்.
அப்படி எழுதிய பதில் தான்...
காத்திருத்தலே பிறப்பு, காத்திருத்தலே இறப்பு, காத்திருத்தலே காதல், காத்திருத்தலே சினிமா, காத்திருத்தலே தவம், காத்திருத்தலே கலை.
அந்த ஒற்றைக்கேள்விக்கு இது என்னுடைய பதில். ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்கும் என நினைக்கும் முட்டாள் அல்ல நான். பல பதில்கள் இருக்கக்கூடும். இருக்கும்.
ஆனால்,
நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்லியே ஆகவேண்டும் என்றும் அப்படி சொல்லாத பட்சத்தில் நான் சொல்கிற பதிலை ஏளனம் செய்யும் அடம்பிடிக்கும் ஆசிரியர்களாய், சர்வாதிகாரிகளாய் நீங்கள் நடப்பேன் எனும் போது நான் மதிபெண்களைப் பற்றி கவலைப்படாத தரங்களை பற்றி சட்டை செய்யாத, மட்டங்களைக் கண்டு கொள்ளாத ஒரு திமிர் பிடித்த மாணவனாகவே இருக்கிறேன்.
நீங்கள் ஹெட்மாஸ்டரிடமோ, பிரின்ஸ்பாலிடமோ தாராளமாய் என்னவேணாலும் புகார் சொல்லலாம்.
ராம்...