<

"Onaayum Aattukkuttiyum" Vimarsanam in Tamil

PUBLISHED DATE | 29/Sep/2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

கோவை ஆவி


மேஸ்ட்ரோ இளையராஜாவின் மெஸ்மரிசம் செய்யும் இசையில் பாடல்களே இல்லாத தமிழ்ப் படம் எடுத்ததற்கே இயக்குனர் மிஷ்கினுக்கு பெரிய பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் சில காட்சிகள் உலக சினிமாவின் தழுவல்கள் போல் தோன்றினாலும் தமிழ் சினிமாவுக்கு இது புதுசுதான்.

 

கதை

ஓநாய் (உல்ப்) என்ற பெயரில் அறியப்படுகிற மிஷ்கினை ஆரம்பம் முதலே போலிஸ் தேடுகிறது. இவரைக் கொல்ல இன்னொரு கொலைகார கும்பலும் நார்த் மற்றும் சவுத் மெட்ராஸ் முழுக்க தேடுகிறது. இவரை முதலில் காப்பாற்றும் ஒரு மருத்துவ  கல்லூரி மாணவர் பின்னர் அவரும் சேர்ந்து ஓநாயை தாக்குகிறார். போலிஸ் மற்றும் கொலைகார கும்பல் இவரை ஏன் துரத்துகிறது, இவரகளிடமிருந்து ஓநாய் தப்பித்ததா என்பதே கிளைமாக்ஸ்.

                                                                                                                                       
ஆக்க்ஷன் 


மிஷ்கினின் முந்தைய படமான யுத்தம் செய் போலவே ஆரம்பிக்கும் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு சஸ்பென்ஸ் வைத்து கொண்டு சென்றிருப்பது சிறப்பு. ஓநாய் கதாப்பாத்திரத்தில் சில காட்சிகளில் பார்த்திபன் நினைவுக்கு வந்து போனாலும் தான் எடுத்துக் கொண்ட பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிஷ்கின். மருத்துவ கல்லூரி மாணவராக ஸ்ரீ. (வழக்கு எண் படத்தில் வருவாரே அவரேதான். இதில் அரும்பு மீசை மழித்து குளித்துவிட்டு அழகாய் வந்திருக்கிறார். ) பதறும் காட்சியிலும் சரி, துப்பாக்கி தன் கைக்கு வந்தவுடன் மிஷ்கினை மிரட்டும் போதும் சரி கண்களை உருட்டி உருட்டி படம் காட்டுகிறார். CID ஆக வரும் ஷாஜியின் நடிப்பும் அருமை.

 

இசை - இயக்கம்


மிஷ்கினின் சொந்தப் படமான இதில் பின்னணி இசை படத்தை நகர்த்தும் தருணங்கள் ஏராளம். இதுபோன்ற த்ரில்லர் படத்திற்கு தேவையான இசையை அற்புதமாக கொடுத்துள்ளார் இசை ஞானி. முதல் பாதியின் விறுவிறுப்பு பின் பாதியிலும் சற்றும் குறையாமல் ரசிகர்களை ஏமாற்றாமல் வேகமான  அதே சமயம் சிக்கல் நிறைந்த திரைக்கதையை நிறைவாய் தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

 

ஆவியை டச் செய்த காட்சி/பாடல்


ட்ரெயினிலிருந்து சாதுர்யமாக தப்பிக்கும் காட்சி. கடைசி போராட்டத்தில் காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் எதிரியை எதிர் கொள்ளும் யுத்தி. பிளாஷ்பேக்கிற்காக நேரத்தை செலவு செய்து கொல்லாமல் சுருக்கமாக அதே சமயம் வித்தியாசமாக சொன்ன விதம் சூப்பர். அசத்தலான கேமிரா கோணங்கள். சில "மிஷ்-கிளிஷேக்களை" மட்டும் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. பாடல்கள் நகைச்சுவை எதுவும் இல்லாததால் எல்லோருக்கும் பிடிப்பது கஷ்டம். இருந்தாலும் நல்ல சினிமா பார்க்க விரும்புவோர் தவறாமல் ஒரு முறை பார்க்கலாம்.


;