என்னமோ ஏதோ (Music Review)
கோவை ஆவி
தெலுங்கில் "அலா மொதலாயிந்தி" என்ற பெயரில் சூப்பர் ஹிட்டான படத்தை கௌதம் கார்த்திக் நடிக்க ரவி தியாகராஜன் இயக்க தமிழில் ரீமேக்காகி வெளிவர இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.. 'இன்னிசை இளவரசன்' இமானின் இசையில் வெளிவந்திருக்கும் பாடல்களை இங்கு பார்ப்போம்...
1. "Shut Up Your Mouth" - அருவி போல் வழிந்தோடும் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரதீப்பின் குரல்களில் வெளிவந்திருக்கும் வித்தியாசமான பாடல். ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் அதிகம் பேசப்பட்டதாலோ என்னவோ எதிர்பார்த்த அளவு இல்லையோ என்று தோன்ற வைக்கிறது.
2. "முட்டாளாய் முட்டாளாய்" - இமானின் 'கிறங்கடிக்கும்' குரலும், கார்க்கியின் வரிகளும், மரியா வின்சென்ட்டின் ஆங்கில "Rap", இடையில் இழைந்தோடும் வயலின் வாசிப்பும் இந்தப் பாடலை மீண்டும் கேட்க வைக்கிறது.
3. தீபக் மற்றும் பூஜா பாடியிருக்கும் "மொசலே மொசலே" பாடல் டூயட் வகையறா என்று சொல்ல முடியாவிட்டாலும் நாயகன் நாயகி இணைந்து பாடும் பாடல் திரையில் ரசிகர்களை குஷிப்படுத்தும்.
4. இந்த ஆல்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றுமொரு பாடல் அனிருத் பாடியிருக்கும் "நீ என்ன பெரிய அப்பாடக்கரா" பாடல் செம்ம ஜாலியான பாடல். தன் படங்களில் மற்ற இசையமைப்பாளர்களை பாட வைக்கும் கலாச்சாரம் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான ஒரு விஷயம்.
5. "புதிய உலகை" - மாற்றுத் திறன் கலைஞர் 'வைக்கம்' விஜயலக்ஷ்மியின் உன்னத குரலில் நாயகியின் உள்ளக் குமுறலை கொஞ்சம் சோகம், கொஞ்சம் ஏக்கமும் கலந்து ஒரு அழகான கவிதையாய் பாடவைத்திருக்கிறார் இமான். கார்க்கியின் வரிகள் மனதை தொடும் விதம். அனிருத், ஸ்ருதிஹாசன் போன்ற பாப்புலர் பாடகர்களுக்கு நடுவே வைக்கம் விஜயலக்ஷ்மிக்கு ஒரு பாடல் கொடுத்ததற்காகவே இமானுக்கு ஒரு ஷொட்டு. அதுதான் இந்த ஆல்பத்தின் சிறந்த பாடல் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஒரு Commercial சினிமாவில் இப்படி ஒரு அர்த்தமுள்ள முயற்சி செய்த இமான் மேல் மரியாதை கூடுகிறது.
சென்ற வருடத்தில் கலக்கிய இமானின் காட்டில் மழை என்று சொல்வதை விட இந்த வருடமும் அவர் இசை மழை நம்மை நனைக்க வந்துவிட்டது.
Rating - 6.5/10
பிடித்தவை - "புதிய உலகை", "முட்டாளாய்"