<

Vanavarayan Vallavarayan Songs Review

PUBLISHED DATE | 19/May/2014

வானவராயன் வல்லவராயன் இசை விமர்சனம்

  கோவை ஆவி 


 

சென்னை, மதுரையை எல்லாம் அளவுக்கு அதிகமாக திரையில் காட்டிவிட்டதாலோ கோவையை மையப்படுத்தி வரும் படங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.. அந்த வரிசையில் வரவிருக்கும்  மற்றொரு படம் இந்த வானவராயன் வல்லவராயன். கிருஷ்ணா, மா.க.பா ஆனந்த் நடித்து யுவனின் இசையில் வெளிவந்திருக்கும் இந்த படத்தின் பாடல்கள் எப்படி இருக்குன்னு பார்ப்போம்..

 

1. "கொங்குநாட்டு தென்றலுக்கும்" - கொங்கு நாட்டின் பெருமைகளையும், அந்த ஊரில் வாழும் ஒரு அண்ணன் தம்பியின் அறிமுகத்தோடும் ஒலிக்கிறது இந்த பாடல். கார்த்திக் ராஜா மற்றும் வெங்கட் பிரபு பாடியிருக்கும் மண் மணம் மணக்கிறது. இது மற்றுமொரு இளையராஜா குடும்ப பாடல். ஒரு வேலை நல்ல பாடகர்கள் பாடி இருந்தால் இந்த பாடல் சிறப்பாக இருந்திருக்கும். 

 

2. "மனசு இங்கே" - மாணிக்கம் விநாயகம் கம்பீரமாக வாசிக்கும் ஒரு காதல் சோக கீதம், காதல் பிரிவில் தவிக்கும் நாயகனின் உணர்வை எடுத்துச் சொல்கிறது. 2 நிமிட situation பாடல் 

 

3.  அத்துமீற நினைக்கும் நாயகன், அலர்ட்டாக இருக்கும் நாயகி ஜாலியாக பாடும் டூயட் ரோமென்ஸ் இந்த  "தக்காளிக்கு தாவணிய"  பாடல். விஜய் யேசுதாஸ், ரேணு பாடியிருக்கும் சிநேகனின் வரிகள் ரசிக்க வைக்கிறது..

 

4. நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் தன் சொந்தக் குரலில் பாடியிருக்கும் பாடல் "தரை மேல இருந்த நான்". ஏற்கனவே கேட்ட யுவன் high-pitch பாடல் போல் இருந்தாலும், ஓரிரு கேட்டலுக்கு பிடித்துப் போகிறது.  பாட்டுக்கு துள்ளலான  மெலடி பின்னணி இசை பலம் சேர்க்கிறது.

 

5. "வாங்கம்மா வாங்கப்பா" பாடல் உறவினர்களை கல்யாணத்திற்கு வரவேற்று பின் காதல் கல்யாணத்தின் அட்வான்டேஜுகளை 'யுத்'களுக்கு  ப்ரியா ஹிமேஷ், ரஞ்சித், சத்யன் மற்றும் வாசுதேவன் எடுத்துரைக்கிறார்கள். 

 

6. "விடுடா பொண்ணுங்களே வேணாம்" - வழக்கமாக சந்தானத்தின் தோளில் சாய்ந்து கொண்டு ஹீரோக்கள் புலம்பும் பாடல். இப்போ சந்தானம் ஹீரோ ஆகிவிட்டதால் அநேகமாக மா.க.பா அந்த இடத்தை நிறைவு செய்வார் என்று நம்பலாம். முகேஷின் குரலில் இந்தப் பாடல் காதலில் "விழுந்த" நாயகனின் புலம்பலாய்  ஒலிக்கிறது.

 

ஒரு சின்ன இடைவெளிக்கு பின் வந்திருக்கும் யுவனின் இந்த ஆல்பம்  சொல்லும்படியாக எதுவும் இல்லை. மொத்தத்தில் வானவராயன் வல்லவராயன் - ஆவரேஜ்ராயன்!

 

Rating - 5/10


;