என்றென்றும் புன்னகை பாடல் விமர்சனம்
கோவை ஆவி
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஜீவா, த்ரிஷா, சந்தானம், வினய், ஆண்ட்ரியா நடித்து வெளிவரவிருக்கும் என்றென்றும் புன்னகை படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்டது.
1. "ஏலே, ஏலே தோஸ்த்துடா" பாடல் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து பாடும் பாடலாக வருகிறது. ஹாரிஸின் ஆஸ்தான பாடகர் கிருஷ் மற்றும் நரேஷ் ஐயரின் குரல்களில் உற்சாகம் கொப்பளிக்கும் பாடல் கேட்கும் போது கொஞ்சம் "விண்ணைத்தாண்டி அன்பே (இரண்டாம் உலகம்)" பாடலின் முதல் சில வரிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
2. மறைந்த வாலிபக் கவிஞர் வாலியின் வரிகளில் "கடல் நான் தான்" பாடல் சுதா ரகுநாதனின் வெண்கல குரலில் பெண்ணின் காதலை உணர்த்தும் பாடல். சூசன் மற்றும் பாலாஜியின் குரல்கள் பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.
3. விஜய், தனுஷ், சிம்பு , விஷால் முதல் சிவகார்த்திகேயன் வரை நடிகர்களே பாட வந்த பிறகு கொஞ்ச நாட்கள் காணாமல் போயிருந்த ஹரிஹரன் ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருக்கும் மெலடி "என்னை சாய்த்தாளே". தாமரையின் தித்திக்கும் தமிழ் பாடலில் ஸ்ரேயா கோஷலின் உச்சரிப்பு அத்தனை அருமை.
4. படத்தின் ஹைலைட்டான பாடல் "வான் எங்கும் நீ மின்ன மின்ன" முன்னரே வந்து மக்களின் பேராதரவை பெற்ற பாடல். ஹரிணி மற்றும் ஆலாப் ராஜு பாடியிருக்கும் டூயட் இளைஞர்களின் ரிங்டோனாய் இருக்கப் போவது உறுதி. "என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய், அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்கப் பார்க்கிறாய்" போன்ற வரிகள் அருமை.
5. இப்போது படங்களில் தவறாது இடம்பெறும் "டாஸ்மாக்" சோகப் பாடல் இதிலும் உண்டு. குத்துப் பாட்டுக்கும் மெலடிக்கும் சின்ன இடைவெளி விட்டு கார்த்திக், ஹரிசரண், வேல்முருகன் மற்றும் ரமேஷ் விநாயகம் குரல்களில் வரும் இந்த "என்னத்த சொல்ல" பாடல் பெரிதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை.
6. கவிஞர் கபிலனின் வரிகளில் திப்பு மற்றும் அபய் பாடியிருக்கும் "ஒத்தையில உலகம்" உறவின் பிரிவை வேதனையுடன் பாடும் பாடல். வழக்கமான ஹாரிஸின் வீணை மீட்டல்கள் பாடலுக்கு மெருகு சேர்க்கிறது.
சில பாடல்கள் முன்பே கேட்ட இசையை நினைவு படுத்தினாலும் இனிமை சேர்க்கும் பாடல்களே! ஒரு சில பாடல்கள் என்றென்றும் புன்னகை தரும் பாடல்களாக சில காலம் நம்மை முணுமுணுக்க வைக்கும்.
மதிப்பீடு : 7/10
About Reviewer:
கோவை ஆவி- அன்னை தந்தை இட்ட பெயர் ஆனந்த ராஜா விஜயராகவன். இணையத்திற்காக சுருக்கமாக ஆவி.