Viswaroopam Review (Tamil Vimarsanam)

PUBLISHED DATE : 07/Feb/2013

Viswaroopam Review (Tamil Vimarsanam)

Viswaroopam Vimarsanam

by Kovai Aavee


ஒரு நூறு கிலோமீட்டர் பயணம் செய்தால் கடவுளின் விஸ்வரூபத்தை காண முடியுமென்றால் மக்கள் அடித்துக் கொண்டு ஓட மாட்டார்களா? அப்படித்தான் அடித்துப் பிடித்து ஓடினேன் கேரளாவின் எல்லைக்கு ( வேலந்தாவளம் தனலட்சுமி தியேட்டர் - DTS ). தலைவரின் படத்தை தரிசிக்க வாய்ப்பு கொடுத்த அந்த தியேட்டருக்கு நன்றி கூறிவிட்டு படம் பார்க்க சென்றேன்.மிகவும் சிறிய தியேட்டர்- சாதாரண நாட்களில் 25 ருபாய் தான் அதிகபட்ச டிக்கட்.. ஆனால் இன்றோ நூறு ரூபாய்.. தமிழக அரசினால் பயன்பெற்ற ஒரு கேரள வியாபாரி(!)


நாம் பலரும் சொல்லக் கேட்ட ஒரு டயலாக் இது.. " இதுவரை தமிழ் சினிமாவில் வராதது".. இந்த மொழி விஸ்வரூபம் படத்திற்கு சாலப் பொருந்தும். இதுவரை வந்ததில்லை, இனிமேல் வரப் போவதுமில்லை.. இது போன்ற ஒரு படத்தை எடுக்கும் தைரியம் தமிழ் சினிமாவில் கலைஞானியைத் தவிர யாருக்கும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை.. இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் கமலைத் தலையில் வைத்து கொண்டாடியிருப்பார்கள். நம் நாட்டிலோ ? .. சரி கதைக்கு வருவோம்...


கதை


த்ரில், சஸ்பென்ஸ் படம் நெடுக வியாபித்திருக்கிறது. அது உண்மையில் விஸ்வநாத்தா? இல்லை தவ்பீக்கா? அவர் நடனக் கலைஞரா இல்லை தீவிரவாதியா? அவருக்கும் தீவிரவாத கும்பலுக்கும் என்ன தொடர்பு..இப்படி படம் பார்க்கப் பார்க்க நம் மனதில் எழும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் முடிச்சுகளையும் சுவாரஸ்யத்துடனும் அதே சமயம் முழுக்க முழுக்க ஆக்க்ஷன் காட்சிகளுடன் விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் கமலஹாசன்.

 

கமல் + ற்ற கதாப்பாத்திரம்


கதக் நடனமாகட்டும், விஸ்வநாத்தின் உடல் மொழியிலாகட்டும், பின் தீவிராவதியாக வரும் காட்சியிலாகட்டும் கமல் உள்ளம் கவர் கள்வனாகிறார்.. நடிகர் கமல்ஹாசன் இதுவரை சிறப்பான பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் உலகத் திரைப்பட சரித்திரத்தில் தனி இடம் பிடிக்கும். ஒசாமா பின்லேடன் மரணத்துக்கு பிறகு ஒசாமாவின் கூடாரத்தில் என்ன நடந்திருக்கும் என்பதே கதை. ஓமராக வரும் ராகுல் போஸ் கமலின் நடிப்பையும் மீறி கவனிக்க வைக்கிறார்.

 
பூஜா, கிட்டத்தட்ட தசாவதாரத்தில் அசின் ஏற்ற அதே கதாப்பாத்திரம்.. கொஞ்சம் கிளாமர், நிறைய லொட லொட.. ஆண்ட்ரியா கமலுக்கு பாடிகார்ட் போலவே வருகிறார். நிறைய காட்சிகளில் அவர் இருந்தாலும் பெரிதாக வேலையில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச டயலாக் " இந்த கதையில எல்லோருக்கும் டபுள் ரோல்.. போறுமா" என்பதுதான். ஒமரின் வலக்கையாக வருபவரும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாசர், உடைகள் வடிவமைத்த கௌதமி, மேக்கப் மேன், சண்டைப் பயிற்சியாளர், முக்கியமாக இதுபோன்ற படத்திற்கு மெருகேற்றும் வண்ணமாக அதிரடி இசையமைத்த சங்கர்-எசான்-லாய் கூட்டணி இப்படி படத்தின் பலத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இரண்டாம் பாகம்


இந்தப் படத்தின் முடிவில், விரைவில் இரண்டாம் பாகம் வருவதாக தலைவர் அறிவித்துள்ளார்.. முதல் பாகத்தை வெளியிடவே இவ்வளவு தடங்கல்கள்.. என்னுடைய கருத்து இரண்டாம் பாகத்தை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எதாவது ஒரு தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்து வெளியிட வேண்டும்.. தமிழில் ஜாக்கி சான் படங்களை டப் செய்து வெளியிடுவதை போல இதையும் வெளியிடலாம்.

 

உங்க கருத்து என்ன?

User Comments